Home கோவில் வரலாறு

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

உண்மை அறிவு இன்பமே உருவாகிப் பாலில் நெய்யாகக் கரந்து உறையும் இறைவன் தன்னை மனத்தால் சிந்தித்து,வாக்கால் வாழ்த்தி,காயத்தால் வணக்கி வழிபடற் பொருட்டு எண்ணற்ற திருமேனிகளைக் கொண்டு எழுத்தருளியிருக்கும் அருள் நிலையங்களே ஆலயங்கள் எனப்படும்.

இத்தகு ஆலயங்கள் பல நிறைந்ததும் விராட்புருடனது இடை நாடிஸ்தானம் என சாந்தோக்ய உபநிடதத்தில் புகழ்ப் பெற்றதும் தக்ஷண கைலாயம் என அழைக்கப்பெறுவதும்,முத்தமிழ் விரகராலும் அருணகிரிநாதராலும் பரவப் பெற்ற பெருமையுடையதுமான இவ் ஈழத்திருநாட்டின் கண் வடபால் சகல சிறப்புகளும்,சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கி நிற்கும் யாழ்ப்பாணம் நல்லூரில் 17ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எட்டு விநாயகர் ஆலயங்களுள் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலும் ஒன்றாகும்.

விருட்சங்களுள் சிறப்பானதும் யாகங்களுக்கு மிக முக்கியத்துவமான ‘’பொரசு’’ என்று அழைக்கப்படும் பலாச மரங்களால் சூழப்பெற்றதும்,தென்கிழக்கே தாமரை,ஆம்பல்,நீலோற்பலம் முதலிய மலர்கள் நிறைந்த தடாகத்தையும்,கிழக்கே செந்நெல் வயல்களையும் கொண்ட அழகிய சூழலில் ‘’வேட்டைக்காரன்’’ வளவு என்னும் பரந்த நிலப்பரப்பிலே கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா சந்திரசேகர விநாயகர்,நூதன மூர்த்திகள் மற்றும் ஏனைய பரிவாரமூர்த்திகளும் கொண்டமைந்துள்ளது.